Monday, November 3, 2008

உன் திசையில் உலகத் திசை


உன்
கண்களில் உண்டு
எரிமலை

உன்
கைகளில் உண்டு
வல்லமை

அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்

உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி

சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!



மெல்ல எழுந்ததற்கே
இத்தனைக் கைவிலங்கு
பொங்கி நீ எழுந்தால்
சிதறுத் தேங்காயாய்
சிறுமதி ஆட்சியாளர்..

உன் திசை
வெற்றி தரும்
பெரும் திசை!
எல்லா திசையினரும்
தேடி வருவார்கள்
ஒருநாள்
உன் திசை...

விண்ணும் மண்ணும்
உன்
சிங்க மடியில்
வெற்றி மலர்களை இறைக்கும்

உனக்காக
வெற்றிப் பல்லக்கு
சுமந்திருக்கிறோம்

மனித உரிமைப் போராட்டச்
சுமைக் கூட
சுகம் தரும் சுமை!

Wednesday, October 29, 2008

உங்கள் சிந்தனைக்கு...


தாராளமயக் கொள்கை

இனவெறி
மதவெறி
பணவெறி
எங்கள்
ஆட்சிக்கானக் கொள்கை...

அராஜகம்
சர்வதிகாரம்
அடக்குமுறை
எங்களின்
எழுதப்படாத சாசனம்

ஊடகச் சுதந்திரம்
மக்கள் சுதந்திரம்
எங்கள்
நரி தந்திரத் தணிக்கை...

ஆட்சியில் அமர்த்திய
உங்களை
ஆட்டிப் படைப்பதே
எங்கள் முழுமுதற் சேவை...

***

யானைக் காது

நீதிக் கேட்டு
வீதியிலே
பாமரர்களின் கூக்குரல்...

உரிமைக் கேட்டு
ஒடுக்கப்பட்டவர்கள்
ஒப்பாரி...

ஏழைகளின்
புலம்பலோசைத்
திக்கெங்கும் ஒலிக்கிறது...

"எனக்கு
யானைக் காது"...
என்ற பிரதமர்
செவிடராய் கும்பகர்ணன்!

***

இடைத்தேர்தல்

இத்துப் போன
பலகை வீடு
இளிச்சபடி இருக்க

பித்துப் பிடித்தச்
சொந்தக்காரன்
தீ வைத்தான்...

"அய்யோ... அய்யய்யோ
இருக்குற ஒடச்சல் வீட்ட
நெருப்புக்கு தர்றீயே
நீ என்ன பைத்தியமா?"
அலறினாள் பொண்டாட்டி...

"போடீ
போக்கத்தவளே
நடுரோட்டுல போய்
ஒப்பாரி வை.."

இடைத்தேர்தல்
வந்துருச்சி!!!