
இது
மக்கள் அரசா
மாக்கள் அரசா?
ஏழைத் தமிழர்களின்
அடிப்படை உரிமைகளை
உலையில் வைத்து
திருவிழா கொண்டாடும்
மாயாசால அரசு
மக்கள் அரசா
மாக்கள் அரசா?
காட்டு தர்பார் ஆட்சி
கன கச்சிதமாய்
கடைவிரிக்கப்பட்டுள்ளதின்
கண்றாவி அடையாளம்
'இண்ட்ராஃப்' இயக்கத் தடை!
சமாதானப் புறாக்கள்
எழுப்பியக் கேள்விகளுக்கு
என்னதான் விடை!
பதிலாகத் தருகிறார்கள்
வில்லோடு வரும்
போலீஸ் வில்லாளர் படை!
சன்மார்க்க நெறியின்
நியாய உரிமைகளைச்
சமாளிக்கத் திராணியற்ற
சகுனி அமைச்சர்கள்
சர்வாதிகாரத் தடையுத்தரவை
அதிகாரக் கைகளில்
ஞானப் பழமாய் ஏந்தினார்கள்
எளியர்களின்
குரல்வளை நெறித்து
அரசியல் சாணக்கியர்களின்
ஆடம்பர விருந்துகளில்
இன்ப கீதங்கள் பாடும்படி
கட்டளையிடுகிறார்கள்...
அடக்கப்பட்டவர்கள்
அலைகடலாய் பொங்கியபோது
சிறுபுல் தடுக்கி விழுந்த
மந்திரிமார்கள்
மாந்தரீகத் தாயத்துகள் அணிந்து- இன
மாயைத் தடை போட்டார்கள்...
நாங்கள்
மக்கள் அரசல்ல
மாக்கள் அரசு
மாசுநிறை அரசு என்பதை
மாசில்லா உலகிற்கு
நிரூபணம் செய்தார்கள்!
தங்கள்
பற்களின் மஞ்சள் கறையைப்
பசை கொண்டு தேய்க்க
சோம்பல் கொண்டவர்கள்
பாயும் உரிமைப் புலியின்
பல்லைப் பிடுங்க
"திருப்புளி" சட்டம் ஏந்தினார்கள்
தென்றல் கன்னியைத்
தங்கள் படுக்கையறைகளில்
தாராளமாக நுழைய விட்டவர்கள்
சூறாவளியாய் எழுந்தவர்களைச்
சிறைக் காட்டிற்கு அனுப்ப
காவலர் கைகளைக்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
அதிகாரப் போதையில்
ஆட்சிக் கட்டிலில்
படுத்துறங்கும் கும்பகர்ணர்கள்
எழுச்சி பெற்ற மக்கள்
வீழ்ச்சியடைய
மீளா யாகம் வார்க்கிறார்கள்...
"இண்ட்ராஃப்"
இரண்டொருவர் அல்ல
இலட்சம் இலட்சமாய்
படை திரண்ட
இலட்சியப் போராளிப் பாசறை
ஆயிரம் தடைகளைத்
தாண்டி முன்னேற
ஆயிரம் ஆயிரமாய்
பொங்கி எழும் புதுப்புனல்
தருக்கர் ஆட்சியின்
தடையுத்தரவில் அஞ்சி
மூங்கில் காட்டில் பதுங்கி ஒளியும்
சிறு நரியல்ல...
வேட்கையுடன் பாயும்
வேங்கை "இண்ட்ராஃப்"!
2 comments:
தனது கவிதைகளின் வழி சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திவரும் கவிஞர் பிரான்சிசை தமிழ் வலையுலகத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
nanum magilchiyadaigiren
Post a Comment