சகோதரர்களே ...
நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...
நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...
நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்
நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்
நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...
நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...
நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...
நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?
விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?
நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!
சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...
வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!